November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘3 நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளே தற்போது வெளியிடப்படுகிறது’

நாட்டில் கொவிட் தொற்றுநோய் தொடர்பான ஆய்வக அறிக்கைகளை வெளியிடுவதில் தாமதம் நிலவுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளே தற்போது வெளியிடப்படுவதாகவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

இதன் காரணமாக நாட்டில் கொரோனா பரவல் குறித்த உண்மையான நிலைவரத்தை அறிந்து கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆய்வக அறிக்கைகளை வெளியிடுவதை விரைவுபடுத்துவது முக்கியமானது என சுட்டிக்காட்டிய அவர், தற்போது வெளியிடப்படும் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கைகளை விட நாட்டில் அதிகமான தொற்றாளர்கள் இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

நிலைமையைக் கருத்தில் கொண்டு பொது மக்கள், தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும், பொது இடங்களில் மக்கள் நீண்ட நேரம் தரித்து நிற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.