இலங்கையின் மேல் மாகாணத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் உள்ள கட்டில்கள் அனைத்தும் நோயாளர்களால் நிறைந்துள்ளதாக மாகாண சுகாதாரத்துறை செயலாளர் காமினி தர்மசேன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் இடம் இல்லாததால் வீட்டிலேயே உயிரிழந்ததாகவும் காமினி தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கொவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 1,531 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்களில் 832 பேர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், 362 பேர் கொவிட் தொற்றுப் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 95,445 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கைக்குள் மேலும் 6 பேர் நேற்றைய தினம் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 667 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.