சீன பாதுகாப்பு அமைச்சரை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரும் போது வீதிப் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 ஆம் திகதி இரவு சீன பாதுகாப்பு அமைச்சர் விசேட பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துவரப்படும் வேளையில் கொழும்பில் சில பிரதேசங்களில் வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
இதன்போது பொரளை பகுதியில் வீதி மூடப்பட்டிருந்த நிலையில், அந்த வீதியில் இருந்த வாகன சாரதியொருவர் வாகனங்களில் ஒலியெழுப்பி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறு வீதிகளில் இருந்த வாகன சாரதிகளுக்கு அறிவிக்கும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
குறித்த காணொளியை அடிப்படையாகக் கொண்டு அந்த நபரை கைது செய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபர் இன்றைய தினத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.