படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்திலும் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் நினைவுதின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேநேரம், ஊடகவியலாளர் ந.கபிலநாத் சிவராம் தொடர்பான நினைவுரையினை நிகழ்த்தியிருந்தார்.
ஊடகவியலாளர் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இளம் ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை, கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.