இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெங் ஃபெங் தனது பயணத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பியுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் இன்று(வியாழக்கிழமை) காலை 8.55 மணியளவில் சீனா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.
அவருடன் 37 பேர் இலங்கைக்கு வந்திருந்த நிலையில், அனைவரும் சீன விமானப் படைக்கு சொந்தமான B-4026 என்ற விசேட விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 27 ஆம் திகதி இரவு சீன பாதுகாப்பு அமைச்சர் வெங் ஃபெங் இலங்கையை வந்தடைந்தார். இதயைடுத்து அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த அவர், குறித்த சந்திப்பின் ஊடாக இரு நாட்டிற்கும் இடையிலான தொடர்பு மேலும் வலுப்பெற்றதாக தெரிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சீனாவின் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் ஆவார். இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபரில் சீனாவின் வெளியுறவுக் கொள்கை தலைவர் யாங் ஜீச்சி நாட்டுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.