January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அலுவலகங்களுக்கு உள்ளேயும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவு!

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அலுவலகங்களின் உள்ளேயும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமது ஊழியர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிந்திருப்பதனை அலுவலக மேற்பார்வையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டியது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்கள் அலுவலகத்திற்கு உள்ளே பிரவேசிக்கும் போதே முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், வேலை செய்யும் முழு நேரத்திலும் அவர்கள் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடைகள், காரியாலயங்கள் உள்ளிட்டவற்றுக்குள் பிரவேசிக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களும் முகக்கவசங்களை அணிந்திருப்பதனை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

அதுமாத்திரமன்றி, அனைத்து நிறுவனங்களினதும் முகாமைத்துவமும் கொவிட்-19 சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டியது முக்கிய கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல, முகக்கவம் அணியாதவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதில் நிறுவனங்களுக்குள் பிரவேசிக்கும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலை கட்டாயமாக அளவீடு செய்யப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற காரணத்தினால் கொவிட்-19 கட்டுப்பாட்டுச் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.