(Photo : sonu sood /twitter )
இந்தியாவில் ஆயிரக்கணக்கில் கொரோனா மரணங்கள் பதிவாகிவரும் நிலையில், அவதியுறும் அரசுக்கும் பொது மக்களுக்கும் சர்வதேசமும் உள்நாட்டு பிரபலங்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்த வகையில், கொரோனா தொற்று பரவல் தொடங்கியது முதல் திரை பிரபலங்கள் பலரும் இந்தியாவை இந்த சூழ்நிலையிலிருந்து மீட்டெடுக்க தம்மை சமூகப்பணியில் இணைத்துக்கொண்டுள்ளனர்.
இந்த வரிசையில், பொலிவுட் திரைத்துறையின் பிரபலம் “சோனு சூட்” ஏழைகளுக்கு மருத்துவ செலவுகளுக்கான உதவிகளை வழங்குவது முதல் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது வரை கடந்த ஆண்டு முதல் ஏராளமான நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.
சமூக ஊடகம் மூலம் இந்திய மக்களுக்கு தொடர்ந்தும் தமது உதவிகளை வழங்கி வருகின்றார்.
வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் நோயாளர்களுக்கு மருத்துவமனை படுக்கைகளையும், ஒக்ஸிஜனையும் வழங்குவது 100 கோடி ரூபா பட்ஜட் படத்தில் நடிப்பதை விடவும் ‘மிகவும் திருப்தி அளிக்கிறது’ என அவர் தெரிவித்துள்ளார்.
பலர் மருத்துவமனைகளுக்கு வெளியே நின்று படுக்கைகள் இல்லாமல் அவதியுறுவதால் தன்னால் தூங்க முடியவில்லை என்றும் சோனு சூட் ஒரு டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
“தூங்க முடியாது .. நள்ளிரவில் எனது தொலைபேசி ஒலிக்கும் போது, நான் கேட்கக்கூடியது யாரோ ஒருவரின் அன்புக்குரியவர்களை காப்பாற்றும்படி கெஞ்சும் ஒரு குரல். நாங்கள் கடினமான காலங்களில் வாழ்கிறோம், ஆனால் நாளை சிறப்பாக இருக்கும், உங்கள் நம்பிக்கையை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள். ஒன்றாக நாம் வெல்வோம். எங்களுக்கு இன்னும் சில உதவும் கைகள் தேவை, ”என்று அவர் குறித்த பதிவில் மேலும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, பல முன்னணி திரை நட்சத்திரங்கள் சோனுவுடன் இந்தப்பணியில் இணைந்து கொண்டுள்ளனர்.
சோனு சமீபத்தில் கோவிட் -19 க்கு உள்ளானார். எனினும் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதன் பின், ஒரு வாரத்திற்குள் குணமடைந்தார்.