January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மக்கள் அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்திருப்பது அவசியமாகும்’; இராணுவத் தளபதி

எதிர்வரும் காலங்களில் நாட்டில் அதிக கொரோனா தொற்று பதிவாகும் பிரதேசங்கள் எந்த நேரத்திலும் தனிமைப்படுத்தப்படலாம். எனவே மக்கள் பல நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைப்பது அவசியம் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

“நாங்கள் மக்களை பீதியடையச் செய்யவோ அல்லது நிலைமையை மறைக்கவோ தேவையில்லை. ஆனால் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பது முக்கியம்” என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

எனினும் நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தே பிரதேசங்களை முடக்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர்  வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சையளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு குறைந்தபட்சம் 10,000 படுக்கைகளை வழங்கவும் நோயாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிக்கவும் இராணுவம் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

அத்தோடு நாட்டில் தேவைக்கு போதுமான ஒட்சிஜன் இருப்பதாக சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், பொய்யான தகவல்கள் குறித்து மக்கள் குழப்பம் அடையாது உத்தியோகபூர்வ நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களுக்கு மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

“எத்தனை சவால்கள் வந்தாலும், எத்தனை அலைகள் வந்தாலும் ஒரே தேசமாக அதனை எதிர்கொண்டு வெற்றி அடைவோம்” எனவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதன்போது தெரிவித்தார்.