தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அவர்களுள் அதிகமானவர்கள் மொனராகல, திருகோணமலை மற்றும் களுத்துறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 3,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் அவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 10 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.