July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்களே வேலை;சுற்று நிருபம் வெளியானது

கொவிட்-19 பரவலை அடுத்து கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு அமைய அரச நிறுவனங்களின் ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இந்த சுற்று நிருபத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள், அதாவது மாதத்திற்கு எட்டு நாட்கள் கடமைக்கு செல்வது போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மேல் ஊழியர்களை சேவைக்கு அழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், இது குறித்து நிறுவனத்தின் தலைவரினால் இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஒதுக்கப்பட்ட தினத்தில் அலுவலகத்திற்கு செல்லத் தவறினால் அது அவரின் தனிப்பட்ட விடுமுறையில் இருந்து குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாற்றத்தின் படி, ஒவ்வொரு அதிகாரியும் அலுவலகத்திற்கு அழைக்கப்படாத நாட்களில் ஒன்லைனில் தனது கடமைகளை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஊழியர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டால், அந்த நாட்களுக்கான முழு சம்பளத்தையும் பெறுவார் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.