January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாடு முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது’; சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் கொவிட்-19 நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவுவதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொவிட் -19 நோய் கட்டுப்பாட்டு அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் புதிய திரிபு வெளிப்படையாக அடையாளம் காணப்பட்டதாகவும், அதனால்தான் அவசர சிகிச்சை பிரிவுகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

அத்துடன், கொரோனா வைரஸின் புதிய திரிபினால் அதிகளவில் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும், பெரியவர்களை விட அவர்களே அதிகமாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும், ஆபத்தை குறைக்கவும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், மக்கள் பாதுகாப்பாக இல்லை என்றும், பொறுப்பற்ற முறையில் அவர்கள் செயல்படுவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை. கொரோனா வைரஸின் புதிய திரிபு காரணமாக கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது எனவும், இது ஏற்கனவே அரசாங்கத்தின் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டை மீறிவிட்டது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சொனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தற்போதுள்ள கொரோனா வைரஸின் புதிய திரிபு மிகவும் கடுமையானது மற்றும் பெரும்பாலான நேர்மறை நோயாளிகள் நிமோனியா போன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம், அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, 8000 நோயாளிகள் இருந்தபோது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகளின் தேவை 17 ஆக இருந்தது. ஆனால், தற்போது அது 36 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.