இலங்கையின், களுத்துறை, கம்பஹா காலி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (திங்கட் கிழமை) இரவு 8 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவின் பொல்ஹேன, ஹீரெலுகெதர, களுவக்கல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் அஸ்வென்னவத்தை வடக்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
அத்தோடு, களுத்துறை மாவட்டத்தின் மீகாத்தென்னை பொலிஸ் பிரிவின் மிரிஸ்வத்தை, மற்றும் பெலவத்தை வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, திருகோணமலை பொலிஸ் பிரிவின் பூம்புஹார் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளும் இரவு 8 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இதன்படி, இன்று நாட்டின் 04 மாவட்டங்களில் 10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.