நாட்டில் தற்போது பரவல் அடைந்து வரும் கொவிட் -19 வைரஸ் தொற்றானது இதுவரை காலமாக நாட்டில் அடையாளம் காணப்பட்ட வைரஸ் தன்மையை விடவும் மாறுபட்டதாகவும், திரிபுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு மையத்தின் பணிப்பாளர் பேராசிரியை நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதியாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தொற்றானது கொவிட் -19 குடும்பத்தை சேர்ந்த B142 என்ற உப வைரஸாகும். எனினும் தற்போது ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டுள்ள வைரஸானது முன்னைய வைரஸ் தன்மைகளை விடவும் மாறுபட்டதாக காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
எனினும் தற்போதைய வைரஸ் எந்த வர்க்கத்தை சேர்ந்தது என்பதை கண்டறிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளில் 70க்கும் அதிகமான வர்க்கங்களை கொண்ட கொவிட் -19 வைரஸ் பரவிக்கொண்டுள்ள காரணத்தினால் தற்போது இலங்கையில் பரவிக்கொண்டுள்ள வைரஸ் இவற்றில் ஏதேனும் ஒரு வைரஸின் தன்மையை கொண்டுள்ளதா என்பதையே முதலில் கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் மிக மோசமாக கொவிட் – 19 வைரஸ் பரவிக்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் வைரஸை ஒத்ததாக இலங்கையில் பரவும் வைரஸ் காணப்படவில்லை எனக் கூறிய அவர், தற்போது வரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் படி இந்த வைரஸ் காற்றில் பரவக்கூடிய தன்மையை கொண்டுள்ளது என்றார்.
மேலும்,ஒருவரில் இருந்து ஐவருக்கு பரவும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.ஆகவே தான் வேகமாக தற்போது வைரஸ் பரவும் தன்மை காணப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.