October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

25 பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் திட்டம்

நாட்டின் பிரதான நகரங்களான கொழும்பு, கண்டி, காலி, திருகோணமலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய நகரங்களை உள்ளடக்கியதாக 25 பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கென தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட உள்ளதாகவும், இந்தக் காணி சுவீகரிப்பு மூலம் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதற்கான சட்டமூலங்கள் ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தேவையான சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் அரசாங்கம் தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இதன்படி, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் மெட்ரோ கொழும்பு நகர அபிவிருத்தி திட்டம், குருநாகலில் இருந்து ஹபரணை வழியாக தம்புள்ளை வரைக்குமான ரயில்பாதை திட்டம் என்பன பிரதான இடம்பிடிக்க உள்ளன.

இதுதவிர, கண்டி, காலி ஆகிய நகரங்களில் உலக வங்கியின் நிதி உதவியோடு மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அநுராதபுரம் நகரம் பிரான்ஸ் அபிவிருத்தி நிதியத்தின் உதவியோடு புதுப்பொலிவு பெற உள்ளது.

திருகோணமலை, தம்புள்ளை, குருநாகல், இரத்தினபுரி ஆகிய நகரங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியோடு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.