July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்-700 க்கும் மேற்பட்டோர் கைது; தேவை ஏற்படின் ரிஷாட் 3 மாதங்கள் தடுத்து வைக்கப்படலாம்

கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தேவை ஏற்படின் அடுத்த மூன்று மாதங்களுக்கு, தடுத்து வைத்து விசாரிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து அவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) பிரிவு 6 (1) இன் படி 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே தேவைப்பட்டால், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரிவு 9 (1) இன் படி அடுத்தடுத்து தடுப்பு உத்தரவு பெறப்பட்டு சந்தேக நபர்களை முதல் மூன்று மாதங்களுக்கு குறையாமல் தடுத்து வைத்து விசாரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 702 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண சனிக்கிழமை தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 202 பேர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 83 பேர் பயங்கரவாத மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, அவரது மாமியார் மற்றும் இரண்டு தற்கொலை குண்டுதாரிகளின் தந்தை மொஹமட் இப்ராஹிம் ஆகியோர் அடங்குவதாக கூறினார்.

சஹ்ரான் ஹாஷிமின் மாமியார் உட்பட மூன்று சந்தேக நபர்கள் வியாழக்கிழமை குளியாப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது ஆதரவாளர்களினால் கல்முனை, அக்கரைப்பற்று, ஒலுவில், மூதூர் மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தப்பட்ட அடிப்படைவாதம் குறித்த சொற்பொழிவுகளில் கலந்து கொண்ட நபர்களை விசாரித்து வருவதாகவும் இதில் 80 பேர் வரை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.