“லிட்ரோ கேஸ் லங்கா” நிறுவனம், அனுமதியின்றி மாற்றங்களுடன் புதிய எரிவாயு சிலிண்டரை சந்தைப்படுத்தியமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
“லிட்ரோ கேஸ் லங்கா” நிறுவனம் கடந்த வாரம் “லிட்ரோ பிரீமியம் ஹைப்ரிட்” என்ற 18 லீட்டர் நிறையுடைய எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்தியது.இதன் விலை ரூ. 1,395 வாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
சிலிண்டர்களில் கிலோ கிராமில் எரிவாயுவின் அளவு குறிப்பிடப்படும் நிலையில், இந்த புதிய சிலிண்டரில் உள்ள எரிவாயுவின் அளவு வழமைக்கு மாறாக லீட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வழக்கமாக 12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் அளவு புதியதில் 18 லீட்டராக குறைக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததுள்ளது.
அதேநேரத்தில், வழக்கமான 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 25 லீட்டர் எரிவாயுவைக் கொண்டுள்ளது. இதன் விலை சந்தையில் ரூ. 1,493, ஆக விற்பனை செய்யப்பட்டது.
எனவே புதிய சிலிண்டரில் 7 லீட்டர் எரிவாயு குறைவாக உள்ளதுடன், ரூ. 100 விலை குறைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசாரித்து வருவதுடன், இது தொடர்பில் “லிட்ரோ கேஸ் லங்கா” நிறுவனத்திடமிருந்து அறிக்கை ஒன்றையும் கோரியுள்ளது.
எனினும் இதன் காரணமாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு அல்லது விலையில் மாற்றம் ஏற்படாது என ஆணைக்குழு உறுதியளித்தது.