November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பெட்டிகலோ கெம்பஸ்’ ஐ பல்கலைக்கழகமாக திறப்பது குறித்து ஆராயப்படுகின்றது’; கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

‘பெட்டிகலோ கெம்பஸ்’ நிறுவனத்தை அரசுடமையாக்குவது தொடர்பாக விசேட அவதானம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனத்தை அரச பல்கலைக்கழகமாக திறப்பதா அல்லது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வளாகமாக திறப்பதா என்பது குறித்து அரசாங்கம் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் கூடிய விரைவில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘பெட்டிகலோ கெம்பஸ்’  ஒரு பல்கலைக்கழகம் இல்லை. பட்டங்களை வழங்க இந்நிறுவனத்திற்கு எவ்வித சட்ட ரீதியான அனுமதியோ அதிகாரமோ இல்லை. ஆனால் இங்குள்ள சில பாரிய உட்கட்டமைப்பு வசதிகள் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில்கூட இல்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

ஆகவே, இங்குள்ள கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு பல்கலைக்கழக மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதென தீர்மானமொன்றை எடுக்க வேண்டியுள்ளது என்றார்.

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை பாரிய அளவில் அதிகரித்துள்ளோம். கடந்த வருடம் 30 ஆயிரம் மாணவர்கள்தான் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வருடம் 41ஆயிரத்து 500 பேர் உள்வாங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் மொத்தமாக 16 பல்கலைக்கழங்கள் தற்போதுள்ளன. அடுத்த மாதம் 17ஆவது அரச பல்கலைக்கழகத்தையும் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக கூறிய அவர், அதன் பிரகாரம் பெட்டிகலோ பல்கலைக்கழகத்தில் உள்ள சலுகைகளை பயன்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றார்.