May 16, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நீண்ட நேரம் மதுபான சாலைகளை திறந்து வைக்க கோரும் டயானா கமகேவின் கருத்து பெண் சமூகத்துக்கு அவமானம்’

மதுபான விற்பனை குறைந்தது அதிகாலை 1 மணி வரையேனும் திறந்துவைக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பாராளுமன்றத்தில் முன்மொழிந்த கருத்து பெண் சமூகத்துக்கு அவமானம் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

பார்கள் உள்ளிட்ட பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்கள் நள்ளிரவுக்கு முன்பே மூடப்படுகின்றது, குறைந்தது அதிகாலை 1 மணி வரையேனும் இவை திறந்திருக்கும் வகையில் உரிமம் வழங்கப்பட வேண்டும் என டயானா கமகே பாராளுமன்றத்தில் முன்மொழிந்தமை தொடர்பிலேயே ஓமல்பே சோபித தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

மதுபானம் விற்பனை செய்வதால் கிடைக்கும் வருமானத்தை பற்றி மட்டும் சிந்திக்காது மதுபான அருந்துவதால் ஏற்படும் ஆபத்து குறித்து சிந்திக்க வேண்டும்.மது விற்பனையால் அரசாங்கத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகமான இலாபம் கிடைக்கின்றது. ஆனால் அதனால் ஏற்படும் விபரீதம் 100 கோடிக்கு மேலாக பாதிப்பு ஏற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மதுபானம் விற்பனையால் பல நோய்கள், குடும்பத் தகராறுகள், வாகன விபத்து, திருடர்கள் அதிகரித்தல் மற்றும் சமூக ஒழுக்கக் கேடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

நாட்டின் மீது அன்பு கொண்டவர்கள் மற்றும் சரியான பாதையில் நாட்டை வழி நடத்த நினைப்போர் மதுபான விற்பனை நிலையங்களை மூட முயல்கின்ற அதேவேளை, நாட்டைப் பாதுகாக்க வேண்டியவர்கள் நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு செல்வது வெளிப்படையாக தெரிவதாகவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான டயனா கமகே 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.