November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் நடைபெறும் அழகிப் போட்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் முடிவு

கொழும்பில் நடைபெற்ற திருமதி ஸ்ரீலங்கா அழகிப் போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, இலங்கையில் நடைபெறும் அனைத்து அழகிப் போட்டிகளையும் ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதன்படி, இலங்கையின் பெயரைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நடைபெறுகின்ற அனைத்து அழகிப் போட்டிகளும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட தனியார் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திருமதி உலக அழகிப் போட்டியை முன்னிட்டு இலங்கையில் ஏற்பாடு செய்யப்படுகின்ற போட்டிகள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும் என்றும், அவை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அத்துடன், இது தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு தனது அமைச்சு தனியார் அமைப்புகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற 2021 திருமதி ஸ்ரீலங்கா அழகிப் போட்டியின் முடிவில் திருமதி ஸ்ரீலங்கா அழகியாக முடிசூட்டப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை திருமதி உலக அழகியான கரோலைன் ஜூரி பலவந்தமாக மேடையில் வைத்து அகற்றி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட திருமதி ஸ்ரீலங்கா அழகி புஷ்பிகா டி சில்வா கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் சமரசப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதற்கு முன்னாள் திருமதி உலக அழகியான கரோலைன் ஜூரி மறுப்பு தெரிவிக்க, புஷ்பிகா டி சில்வா தரப்பினர் நீதிமன்றத்தை நாடுவதற்கு தீர்மானித்தனர்.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி மற்றும் விளம்பர நடிகை சூலா பத்மேந்திர ஆகிய இருவரும் தலா ரூ. 100,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இது இவ்வாறிருக்க, கரோலைன் ஜூரி தனது திருமதி உலக அழகி பட்டத்தை கைவிட முடிவு செய்வதாக அறிவித்திருந்தார்.