November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா : கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதார அமைச்சு தீர்மானம்!

இலங்கையில் கொரோனா தொற்றின் 3 ஆவது அலை தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள  நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக பல கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மதிப்பாய்வு கூட்டத்தின்போது தெரிவித்தார்.

பண்டிகை காலங்களில் மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறியதையடுத்தே நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

புதிய கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் படி நாள் ஒன்றுக்கு  15,000 க்கு அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துதல் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக அபராதங்களை விதிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தருவோருக்கான விசேட தனிமைப்படுத்தல் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

அவசர சிகிச்சை பிரிவுகளில் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கொரோனா தொற்றாளர்களுக்கு தேவையான ஹை ப்ளோர் (High Floor) ஒட்சிசனை வழங்குதல், தொற்றாளர்களின் தகவல்களை திரட்டும் பணிகளை விரைவுபடுத்தல் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மேலதிக பாதுகாப்பு அங்கிகளை வழங்குதல் ஆகியவை குறித்தும் மதிப்பாய்வு கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு நாடளாவிய ரீதியில், மேலும் பல வைத்தியசாலைகளை இனங்காணல் மற்றும் மேம்படுத்தல், மற்றும் கொரோனா நோயாளர்களின் நோய் நிலைமைகளுக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்தி பொருத்தமான வைத்தியசாலைகளில் அனுமதித்து தேவையான சிகிச்சையை வழங்கவும் திட்டமிடப்பட்டது.

கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் அதேவேளை, ஏனைய நோயாளிகளுக்கான சிகிச்சைகளை தடையின்றி வழங்குதல் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, குருணாகல் மாவட்டத்தின் தித்தவல்லேகல கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.