கஞ்சா செய்கையை இலங்கையில் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பல நாடுகள் கஞ்சாவை சட்டபூர்வமாக்கியுள்ளதுடன் ,கஞ்சாவை பயிர் செய்து ஏற்றுமதி செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக இலங்கையில் இரவு நேர பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்த போதிலும் அவர்களின் பணத்தை செலவழிக்க போதுமான இடங்கள் இங்கு இல்லை எனவும் குறிப்பிட்டார்.
பார்கள் உள்ளிட்ட பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்கள் நள்ளிரவுக்கு முன்பே மூடப்படுகின்றது, குறைந்தது அதிகாலை 1 மணி வரையேனும் இவை திறந்திருக்கும் வகையில் உரிமம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கலால் கட்டளைச் சட்டத்தில் அதை நிறுவ வேண்டும் என தாம் முன்மொழிவதாகவும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் ஒரு புதையலில் அமர்ந்திருக்கிறோம், நாங்கள் அதை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. நவீன உலகத்துடன் ஒத்துப்போகும் வகையில், இரவு நேர பொருளாதாரத்தை விருத்தி செய்ய நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்த வேண்டும்,” என்றார்.
இதேவேளை, இந்த ஆண்டின் தொடக்கத்தில், மொனராகலவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் இலங்கையில் கஞ்சாவை மருத்துவப் பயிராக வளர்ப்பதற்கு சட்டபூர்வமாக்கும் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.