January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புத்தர் சிலைகள் உடைப்பு விவகாரம் ; நௌபர் மௌலவி உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ள நௌபர் மௌலவி உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேகாலை மேல்நீதிமன்றில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

2018 டிசம்பரில் மாவனெல்லையின் 5 இடங்களிலுள்ள புத்தர் சிலைகளை உடைத்து சமூகங்களுக்கிடையே மத ரீதியான தவறான உணர்வை ஏற்படுத்தியதுடன், ஒற்றுமையை சீர்குலைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமைய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

நௌபர் மௌலவி, இப்ராஹிம் மௌலவி, மொஹமட் சாஜித், மொஹமட் சாஹிட், சாதிக் அப்துல்லா, சைனுல் ஆப்தீன், மொஹமட் மில்ஹான் ஆகியோருடன் மேலும் 9 பேருக்கு எதிராக இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்து, அமைச்சரவை உப குழு சமர்ப்பித்த அறிக்கையில் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியே என்பது உறுதியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.