தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து சிறுபான்மை கட்சிகளிடமும் ஆலோசனைகள் பெறப்பட்ட பின்னரே, தமது ஆலோசனைகள் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சுய தொழில் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் நோக்கில் நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தில், சிறுபான்மைக் கட்சிகளுக்கு பாதகமாக அமையும் யோசனைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் அரசாங்கத்தால் இரு யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக திட்டம் முன்வைக்கப்படவில்லை என்றும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஏற்கமுடியாது என தாம் குறிப்பிட்டதை அடுத்து, சொந்த திட்டத்தை முன்வைக்குமாறு கோரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து சிறுபான்மையின கட்சிகளையும் தொடர்புகொண்டு, நியாயமான திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.