இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை இம்மாதம் 23 ஆம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸை 10 வாரங்களிலா அல்லது 12 வாரங்களிலா செலுத்துவது என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழு, தொற்று நோய் தடுப்புப் பிரிவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள நிலையில், அது தொடர்பான இறுதித் தீர்மானத்தினை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில், நாட்டில் 925,242 பேருக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம், தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்துவதற்காக 350,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், இன்னுமொரு தொகுதி தடுப்பூசிகள் மிக விரைவில் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை இந்த மாத இறுதிக்குள் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்- வி மற்றும் அமெரிக்காவின் பைசர் ஆகிய தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.