‘தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு பறிப்பதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்துவதுடன் ஏற்கனவே பறித்துக் கொண்ட நிலங்களில் இருந்து குடியேற்றங்களையும், முகாம்களையும் அகற்ற வலியுறுத்த வேண்டும்’ என வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விடுதலை பெற்றது முதல், ஆட்சிப் பொறுப்பு வகித்த பெரும்பான்மை அரசுகள், தமிழர்களுக்கு சொந்தமான பகுதிகளில் பெரும்பான்மை மக்களை குடி அமர்த்தியதுடன், படை முகாம்களையும் அமைத்தனர் என்று அவர் கூறியுள்ளார்.
போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பின்னரும், ஈழத்தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை. இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உலக நாடுகளை ஏமாற்ற, ஏற்கெனவே பறித்த நிலங்களை திரும்ப வழங்குவதாக சாக்கு போக்கு காட்டிக்கொண்டு, மறுபுறம், புதிய நிலங்களை பறிக்கின்றார்கள்.தமிழர்கள் தலைமுறை தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை பறிக்கின்றார்கள் என்று வைகோ கூறியுள்ளார்.
பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களைப் பறிப்பது மட்டும் அல்லாமல், கடந்த ஆண்டு, தொல்லியல் துறையின் சார்பில் பௌத்த சமய தடங்கள் குறித்த ஆய்வு என்ற பெயரில், தமிழர்களின் நிலங்களைப் பறிக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தபோதும் இலங்கை நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் பதிவாகி இருக்கின்ற போதும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
எனவே தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு பறிப்பதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.