January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப் பெண்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை’

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களில் முதல் தொகுதியினர் இந்த மாத இறுதிக்குள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என கொழும்பு கெசட் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள தடுப்பு முகாம்களில் 40 ற்கும் மேற்பட்ட இலங்கைப் பணிப்பெண்கள் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ‘அம்னெஸ்டி இண்டர்நெஷனல்’  அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மூன்று சிறுவர்களும், தீவிர சிகிச்கை தேவைப்படும் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பெண்களை இலங்கைக்குத் திருப்பி அழைத்து வருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசா விதிமுறைகளை மீறியமைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 பெண்கள் கட்டம் கட்டமாக நாட்டுக்கு திருப்பி அனுப்ப உள்ளதாகவும் அதில் முதல் தொகுதியினர் இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் சவுதி அரேபியா வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

பல காரணங்களினால் சவுதி அதிகாரிகளால் பணி நீக்கம் செய்யப்படும் பெண்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை 2020 ஏப்ரலில் இடை நிறுத்தப்பட்டதையடுத்து இந்த நிலைமை தோன்றியுள்ளது.

இதையடுத்து, ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களை மீட்பதற்கான பேச்சுவார்த்தைகள் இலங்கை அதிகாரிகளுக்கும் சவூதி அரேபியாவின் அதிகாரிகளுக்கும் இடையே நடந்து வருவதாக  சவுதிக்கான இலங்கை தூதுவர் மதுக்க விக்ரமராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில், இலங்கை விமான நிறுவனங்களை பயன்படுத்தி இலங்கையர்களை சிறு குழுக்களாக நாடு கடத்த ஆலோசிக்கப்பட்டதாகவும் இதில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே சவுதி அரேபியாவில் தவறாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களுக்கு தீர்வை பெற்றுத் தருவதாக ஊடகவியலாளர் ஒருவரின் டுவீட்டுக்கு பதிலளித்த விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உறுதியளித்தார்.

வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதாகவும், இந்த விஷயத்தை அவர்கள் எவ்வளவு விரைவாக தீர்க்க முடியும் என்றும் குறித்த பதிவில் அவர்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.