November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது’; அனுரகுமார

சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு இன்று இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அவர்கள் வெறுமனே வியாபார நாடாக மாத்திரம் இலங்கையை பார்க்காது தமக்கு தேவையான மையமாக கணித்துள்ள காரணத்தினால் அவர்களுக்கு ஏற்ற அரசியல் தளம் ஒன்றினை உருவாக்க  நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு பெற்றுள்ள கடன் தொகையை மீள செலுத்த முடியாது கடன் வாங்கிய நாடுகளிடம் மண்டியிடும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் நாளுக்கு நாள் நாடு பலவீனப்பட்டுக்கொண்டே செல்வதாகவும் அனுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு சீனாவின் பொருளாதார தலையீடு காரணமாக நாட்டின் வளங்களை இழக்கும் அளவிற்கு நாம் வந்துவிட்டோம் என்ற விமர்சனத்தை ஒரு தடவை சீன தூதுவர் எம்மை சந்தித்த வேளையில் முன்வைத்தேன்.

அதற்கு அவர் என்னிடம் கூறியது ஒன்றுதான் ‘ இலங்கையில் முன்னெடுக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் நாம் முன்வைத்த திட்டங்கள் அல்ல, அனைத்துமே இலங்கை அரசாங்கம் எம்மிடம் முன்வைத்த திட்டங்களே.அதற்கு உதவிகளை மட்டுமே நாம் செய்தோம்’ என்றார்.

எனவே சீனாவை மாத்திரம் திட்டுவது அர்த்தமற்றதாகும்.அவர்களுக்கு இடமளித்த ஆட்சியாளர்களே பாரிய தவறினை செய்துள்ளனர்.அவர்களை மாற்ற வேண்டியதே அவசியம் என கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை இந்தியாவின் சந்தை, உற்பத்தி என்பன இலங்கைக்கு வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவுடன் எமது பொருளாதார உறவு பலமடைந்தால் நாடு பாதுகாப்பாகவும் அதேபோல் ஆசியாவின் முக்கிய மையமாகவும் நாம் மாறலாம்.

இதேவேளை மூவின மக்களும் ஒன்றிணைந்து,நாட்டினை சரியான பாதையில் கொண்டு செல்லும் அரசியல் தலைமையை உருவாக்கிக்கொண்டு நாடாக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதையே முதலில் சிந்திக்க வேண்டும்.

தனித் தலைவர்களினால் நாட்டினை கட்டியெழுப்ப முடியாது. சகலரும் இணைந்தால் மட்டுமே நாடாக மீள முடியும் எனவும் அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.