பொது மக்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் சட்டம் உருவாக்கும் யோசனை ஏதும் அரசாங்கத்திற்கு கிடையாது என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அடமிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள தண்டனை சட்டக் கோவையில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தவும், புதிய விடயங்களை இணைத்துக் கொள்ளவும் மாத்திரமே அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லேரியா பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஏனைய ஜனநாயக நாடுகளைப் போன்று இலங்கையிலும் கருத்துச் சுதந்திரம் தாராளமாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர், நல்ல நோக்கத்திற்காக அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை சில தரப்பினர் தவறான முறையில் பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி சமூக வலைத்தளங்களில் போலியான மற்றும் வெறுக்கத்தக்க வகையில் செய்திகளைப் பதிவேற்றம் செய்து சமூகத்தின் மத்தியில் மாறுபட்ட நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் போலியான செய்திகள் குறித்து ஆராய விசேட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போலியான தகவல்கள் தேசிய நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் அடிப்படைவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் எனவும், இதனால் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் சரத் வீரசேகர, இதன்படி கருத்துச் சுதந்திரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.