இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு சீர்திருத்த செயன்முறை, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான முன்னேற்றம் உள்ளிட்ட பல செயற்பாடுகள் குறித்து அமைச்சர் தினேஸ் குணவர்தன, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களுக்கு விளக்கியுள்ளார்.
இதேவேளை கொவிட்19 மற்றும் அதற்கு பிந்தைய சூழலில் இலங்கையில் சுற்றுலா துறையை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான இலங்கை சுகாதார நெறிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெர்டு, இத்தாலி தூதுவர் ரீட்டா மன்னெல்லா, ருமேனியத் தூதுவரின் தூதரகப் பொறுப்பாளர் விக்டர் சியுஜ்தியா மற்றும் ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தூதரகத் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.