File Photo
தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அனுமதியில்லாமல் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நோயாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மக்கள் அமைப்பினால் இன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பின் தலைவர் லவீ பெனடிக் மற்றும் அதன் செயலாளர் கிறிஸ்டின் பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மற்றும் தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதேவேளை நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, உலக சுகாதார தாபனம் மற்றும் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையருக்கு செலுத்த மாட்டோம் எனவும், அனுமதி கிடைக்கும் வரையில் இங்குள்ள சீனர்களுக்கு மட்டுமே அது செலுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.