குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சினோபார்ம் தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதை உடனடியாக அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேநேரம், சீனாவின் சினோபார்ம் கொவிட் -19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்காததற்காக இலங்கை மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) ஏழு உறுப்பினர்கள் சுகாதார அமைச்சரால் நீக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசிக்கு இலங்கை மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை அனுமதி வழங்காத அதேவேளை , உலக சுகாதார ஸ்தாபனமும் அனுமதி வழங்கவில்லை.
அதேபோல, தடுப்பூசிகள் தொடர்பில் ஆராய்வதற்காக 2017 இல் நியமிக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர்கள் 8 பேர் அடங்கிய குழுவும் இதற்கு அனுமதி வழங்கவில்லை.
இந்த குழு சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் மாத்திரம் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டதல்ல என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் அல்லது சுகாதார அமைச்சருக்கு தடுப்பூசிகள் சிறந்தவையா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியாது.
அதற்காகவே சட்ட முறைப்படி இவ்வாறான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. எனினும், சினோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள விசேட நிபுணர் குழுவின் அங்கத்தவர்கள் சுகாதார அமைச்சரால் நீக்கப்பட்டுள்ளனர். அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறு இதுவரையில் 7 உறுப்பினர்கள் இக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் தடுப்பூசி விடயத்தில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லாமல் போகுமாயின் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அது பாரிய அச்சுறுத்தலாக அமையும். அதுமாத்திரமின்றி, இந்தத் தடுப்பூசியினை போடுவதால் குறுகிய மற்றும் நீண்டகால நோய்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உண்டு.
நாங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளோம். இது கொவிட் – 19 ஐக் கட்டுப்படுத்துவதில் குறுகிய கால சிக்கல்களை உருவாக்கும். மறுபுறத்தில் பொதுவாக தடுப்பூசி திட்டம் குறித்த நம்பிக்கையை மக்கள் இழப்பார்கள். இதேபோன்ற நிலைமை 2019 இல் பிலிப்பைன்ஸிலும் ஏற்பட்டது.இதுபோன்ற உலகளாவிய தொற்று நோய்களின் போது, உலகளவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட சிறந்த தடுப்பூசிகளை அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டும்.
எனவே, அரசாங்கம் நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசிகளையே நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்.
எனவே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், கடனை மீள செலுத்த வேண்டிய தேவைக்காகவும் இவ்வாறு மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
இது இவ்வாறிருக்க, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாத சினோபார்ம் தடுப்பூசியை எமது நாட்டு மக்களுக்கு வழங்குவது ஒழுக்கமற்ற செயற்பாடாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு அந்த சங்கம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.