July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தேங்காய் எண்ணெய்யில் மட்டுமல்ல வேறு பல பொருட்களிலும் ஆபத்தான நச்சுப் பொருட்கள் உள்ளன’

இலங்கையில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டமை தெரியவந்ததையடுத்து, இதுவரை வெளிவராத அதிர்ச்சியை ஏற்படுத்தும் பல தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும், பருப்பு, மிளகாய்த் தூள், தேங்காய் எண்ணெய், மீன் டின், போன்ற பல உணவுப்பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளதாக இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெனரல் டொக்டர் சித்திக சேனரத்ன தெரிவிக்கின்றார்.

ஹிரு செய்திச் சேவையுடனான நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பூஞ்சணம் உண்டாகும் பெரும்பாலும் அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் அதன் உற்பத்திகளில் தீங்கு விளைவிக்கும் அப்லாடொக்சின் வேதிப்பொருள் காணப்படும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கையில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் மிளகாய்த் தூள் போன்றவற்றிலும் இந்த வேதிப்பொருள் இருக்கலாம் என தெரிவித்துள்ள அவர், உண்மைகளை வெளிப்படுத்தினால் அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பாதிப்படையும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறிது காலம் அவகாசம் வழங்கியேனும்  அவ்வாறான நிறுவனங்களை சரி செய்ய முயன்று வருவதாக குறித்த நேர்காணலில் டொக்டர் சித்திக சேனரத்ன தெரிவித்துள்ளமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

அத்தோடு அப்லாடொக்சின் அடங்கிய உணவுப்பொருட்கள் இலங்கையில் இறக்குமதி செய்யப்படுவது இது முதல் சந்தர்ப்பம் இல்லை என கூறும் அவர், அவ்வாறு இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனும் தகவலையும் வெளியிட்டுள்ளார்.

நுகர்வோருக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க தமது நிறுவனத்தால் முடியாது என கூறியுள்ள அவர், அது தொடர்பில் அறிவிப்பதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில், தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்களில் ஒன்று மட்டுமே இலங்கை தர நிர்ணய சான்றிதழைக் கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை அடையாளம் கண்டு அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டும் செயற்பாடு நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தேங்காய் எண்ணெய் மட்டும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறான நிறுவனங்களுக்கு எதிராக உடனடியாக தண்டனை வழங்கும் முறை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இதனை மாற்றுவது கடினம் என்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெனரல் டொக்டர் சித்திக சேனரத்ன தெரிவித்துள்ளார்.