தேசிய வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அரச திணைக்களங்கள், வளங்களை அழித்து குடியேற்றத் திட்டத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு பிரதேசத்தில் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையில் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளப்படுவது குறித்த கள விஜயமொன்றை மேற்கொண்ட போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச திணைக்களங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அது தொடர்பாக தாம் ஆராய்ந்து, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வன வளத் திணைக்களம் தமிழ் மக்களின் வாழ்விடங்களை காட்டுப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியுள்ளதால், மக்கள் மீள்குடியேற முடியாத நிலை தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய வனங்களை, அரச அதிகாரிகள் காடழிப்பை மேற்கொள்ள அரசாங்கத்தின் இன்னுமெரு திணைக்களத்திற்கு வழங்கியுள்ளதாகவும் சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
வன பாதுகாப்புப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்குப் பிரித்துக் கொடுத்து, மரமுந்திரிகைச் செய்கை இடம்பெறுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.