இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 6000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சட்டமா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் 6000 வாள்களுக்கும் என்ன நடந்தது என்று விசாரணை நடத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்னே கொரயா ஆகியோரை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி அவந்தி பெரேரா, வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் தலைமையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இரண்டு குழுக்கள் அமைக்ககப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதனால் குறித்த மனுவை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அவசியம் இருக்காது எனவும், இந்த விடயம் குறித்து மனுதாரரிடம் கேட்டறிந்து மே 6 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.