தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய தொழில் வாய்ப்புகள் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு பத்தாயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி அஜித் ஜீ மதுரபெரும தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் 200,000 மனித வளத்தை உருவாக்கும் நேக்கத்தின் அடிப்படையில் இவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இதனைத் தெரிவித்தார்.
கணினி தரவு அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் தொடர்பான பட்டப்படிப்புகளுக்கான கற்கை நெறிகள் முன்னெடுக்கப்படவுள்ளனது என்றும், தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஏற்றவாறு கற்கை நெறிகள் திருத்தப்படவுள்ளதாகவும், இதன்படி புதிய கற்கை நெறிகள் ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கற்கை நெறிகள் இணையம் மூலம் முன்னெடுக்கப்படுவதுடன், இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
விண்ணப்பங்களை www.ou.ac.lk/bsehons மற்றும் www.vgc.ac.lk. என்ற இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.