காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குழுவொன்றை அமைத்து, ஒரு மாத காலத்துக்குள் தீர்வு வழங்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் வகையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, ‘காணாமல் போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து, ஒரு மாதத்தில் தீர்வினைப் பெற்றுத் தரமுடியும்’ என்று அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளில் 10 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி, அவர்கள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை சேகரித்து, தீர்வுக்கான விடயங்களை ஆராய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இரு அணிகளாகப் பிரிந்து செயற்படுகின்றதாகவும், அவர்களில் ஒரு தரப்பு பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையை, தீராத ஒன்றாக வைத்திருக்க விரும்பவில்லை என்றும் இதுதொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.