May 25, 2025 11:07:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புதிய ஆயுர்வேத சிகரெட்டுக்கு சட்ட அனுமதி வழங்கப்படவில்லை’: புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரசபை

இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆயர்வேத சிகரெட்டுக்கு எதிராக தேசிய புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்சவினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஆயர்வேத சிகரெட்டுக்கு தாம் அனுமதி வழங்கவில்லை என்று சுகாதார அமைச்சும் ஆயர்வேத திணைக்களமும் அறிவித்ததை அடுத்தே, இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஆயுர்வேத சிகரெட்டை அறிமுகப்படுத்திய அமைச்சர் விமல் வீரவன்ச

‘லயன் ஹார்ட்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட கறுவாய் சிகரெட்டுக்கான ‘பொதுமக்கள் பாதிப்பு அறிக்கை’ பெறப்படவில்லை என்றும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த சிகரெட்டை உற்பத்தி செய்து, விநியோகிப்பதைத் தவிர்க்குமாறு தாம் எழுத்து மூலம் அறிவித்திருந்த நிலையில், இவ்வாறு சிகரெட் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரசபை குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், தாம் ‘லயன் ஹார்ட்’ தயாரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.