கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையின் தற்காலிக பணியாளர்கள் தமது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிரதேச சபைக்கு முன்பாக இன்று காலை 6 மணி முதல் அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
5 வருடங்களுக்கும் மேலாக தாம் தற்காலிக பணியாளர்களாக கடமையாற்றிவரும் நிலையில் தமக்கு நிரந்த நியமனம் வழங்கப்படாது, ஒரு லட்சம் வேலைவாய்ப்பின் ஊடாக புதியவர்களை இணைத்துக்கொள்ள முயற்சிப்பதாக போராட்டத்தில் ஈடுபடுவோர் தெரிவித்துள்ளனர்.
சுகாதார சிற்றூழியர்களாக பிரதேச சபையில் பணியாற்றும் இவர்கள் இன்று நகர துப்பரவாக்கல் பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை. இதேவேளை நிரந்தர பணியாளர்கள் சிலரைக்கொண்டு நகரை துப்பரவு செய்யும் பணிகளிற்கு செல்ல முற்பட்டபோது வாகனங்களை மறித்து அவை வெளியே செல்லாத வகையில் பிரதான வாயிலை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் கரைச்சி பிரதேச சபையின் பொறுப்பதிகாரி ஜெயகாந்தன் பேச்சுவார்த்தை நடார்த்திய போதும், உள்ளே இருந்து வாகனங்களை வெளியே விடாது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.