
மட்டக்களப்பு
மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பொது அமைப்புகள், ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகள், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் , பெண்கள் அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டம் தொடர்பிலான ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டதுடன், இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மனித உரிமைகள் ஆணையாளருக்கு சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அதிகாரி ஆகியோருக்கு இவ்வறிக்கை அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்திலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் குழும தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள், போரினால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினர் மற்றும் வட மாகாணத்தைச் சேர்ந்த பொது மக்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது மியன்மார் இராணுவ ஆட்சியுடன் கொண்டுள்ள அனைத்து விதமான உறவுகளையும் பரிமாற்றங்களையும் இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.