November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழர் பிரச்சனைக்கு தீர்வை வழங்க முடியுமென்றால் பஸில் ராஜபக்‌ஷவை ஆதரிக்கத் தயார்”

2024 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள  ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்‌ஷவினால் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்க தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சுமந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார்

இதன்போது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் அரசியல் பிரச்சனைகள் குறித்த தெளிவான வேலைத்திட்டம் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல் சஜித்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியவேளை வடக்கு- கிழக்கு மக்களின் பிரதான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக இருந்ததாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய வேளையில் உங்களால் மட்டுமே தமிழர்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை நான் நேரடியாக குறிப்பிட்டிருந்தேன் எனவும், சிங்கள மக்கள் எதிர்க்காத ஒரே தலைவர் என்ற காரணத்தினால் அவர் எடுக்கும் தீர்மானங்கள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தான் கூறியதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்ட போதும், இன்னமும் தீர்வுகளை வழங்க அவர் முன்வரவில்லை எனவும் சுமந்திரன்சுட்டிக்காட்டியுள்ளார்.