யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அங்கு சர்வதேச நீதியை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்களை சந்திக்காமல் சென்றமை தொடர்பில் அந்த போராட்டத்தில் ஈடுபடுவோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் மரியாதை நிமித்தமாக நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து கலந்துரையாடியதுடன் யாழில் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளார்.
இந்நிலையில் நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து அங்கிருந்து திரும்பும் போது, அந்த ஆதினத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் தம்மை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்காமல் சென்றதாக போராட்டத்தில் ஈடுபடுவோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் 13 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
நீதி வேண்டிய இந்தப் போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பரும் தனது ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.