November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக மியன்மார் பிரஜைகள் சமூக ஊடகங்களில் போராட்டம்!

மியன்மாரின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் வுன்னா முவாங் எல்வினுக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அனுப்பியுள்ள கடிதத்திற்கு மியன்மார் பிரஜைகள் சமூக ஊடகங்களில் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

#ProtestSriLanka, #ProtestBIMSTEC எனும் ஹாஷ் டெக் மூலம், அவர்கள் சமூக ஊடகங்களில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் சதித் திட்டத்தை நடத்தி மியன்மார் இராணுவம் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் பின்னர் மியான்மாரின் வெளிவிவகார அமைச்சராக வுன்னா முவாங் எல்வின் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, 2021 மார்ச் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறப்பு மூத்த அதிகாரிகள் கூட்டத்திலும், ஏப்ரல் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள (BIMSTEC) பல் துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடாவின் அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த கடிதம், வுன்னா முவாங் எல்வினை அங்கீகரிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்தும், கடிதத்தை மீள பெற கோரியும், தாம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியும் மியன்மார் பிரஜைகள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அத்தோடு இலங்கை, மியன்மார் இராணுவத்தை ஆதரிக்கும் வகையில் செயற்படுவதாகவும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே மியன்மார் பிரஜைகள் இலங்கைக்கு எதிராக சமூக ஊடகங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

எனினும், அமைச்சரின் கடிதம் சாதாரணமானது என இலங்கையின் வெளிவிவகார செயலாளர் கலாநிதி ஜயனாத் கொலம்பகே, “கொழும்பு கெசட்” செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இது மியான்மாரில் நடந்த இராணுவ சதித்திட்டத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தற்போது பிம்ஸ்டெக்கின் தலைவராக உள்ளதன் காரணமாகவே கொழும்பில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளுக்கு பிம்ஸ்டெக்கின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அமைச்சர் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம், எந்த வகையிலும் மியன்மார் இராணுவத்தினரை ஆதரிக்கும் வகையில் அமையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

https://twitter.com/thanda01022021/status/1369558921229209600?s=19