கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் மக்களுக்கு போடப்படும் ‘அஸ்ட்ரா ஜெனகா’ தடுப்பூசிகள் தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனைகளை நடத்தி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொரோனா தடுப்பூசி மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் என்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்ற தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘இந்த தடுப்பூசிகளை போட்ட பின்னர் இலங்கை மக்களின் உடம்பில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுகின்றன எனவும், உடம்பில் பிறபொருளெதிரிகள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 2,000 சுகாதார ஊழியர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதித்து வருவதாகவும், அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது என்பதனால் தடுப்பூசியை போடுவதனால் எந்தவொரு பக்கவிளைவுகளும் இல்லை என்ற நல்ல முடிவுகள் தான் உள்ளது என்று பேராசிரியர் கூறியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வழங்கப்படும் 20 சதவீதமான தடுப்பூசிகள் நேற்று நாட்டை வந்தடைந்தன.
இதுஇவ்வாறிருக்க, உலக சுகாதார அமைப்பால் கொவெக்ஸ் வசதியின் கீழ் யுனிசெப் நிறுவனத்தின் ஊடாக நாட்டுக்கு வழங்கப்பட்ட முதலாவது கொவிட்19 தடுப்பூசி தொகை, அதிக அவதானமிக்க வலயங்களில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நாரஹேன்பிட கிருள வீதியில் உள்ள மேற்கு தேசிய மருந்தகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், உடல் அங்கவீனமானவர்களுக்கும் இன்றைய தினம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.