வறுமைக்கோட்டில் உள்ள மக்களுக்கு பல்வேறு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டபோதிலும் இறுதி நேரத்தில் மன்னார் மாவட்டத்திற்கு கையளிக்கப்பட்ட வீடுகள் தற்போது வரை முழுமையடையவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக கடந்த அரசாங்கத்தினால் மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் தற்போது வரை முழுமை அடையாத நிலையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டுத் திட்டங்களுக்கு என சுமார் 2 இலட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று வரை மேலதிக கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படாமல் குறித்த மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செயற்பாட்டால் மக்கள் கடன்பட்டுள்ளதாகவும், கடனை மீட்டுக்கொள்ள முடியாத நிலை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அரசாங்கம் குறித்த வீட்டுத்திட்டத்தை முழுமையாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தும், இன்று வரை குறித்த வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் சரியான தீர்வை மாத இறுதிக்குள் வழங்கி, மக்களுக்குரிய கொடுப்பனவை துரிதமாக வழங்க வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.