January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஐநா தீர்மான வரைவை ஆதரித்ததன் மூலம் கூட்டமைப்பு மீண்டும் தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளது”

ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மான வரைவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பிரதிநிதிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு இலங்கை அரசாங்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முழுமையாகப் புறக்கணித்து தயாரிக்கப்பட்டுள்ள ஐநா இரண்டாம் வரைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இலங்கைக்கு எதிரான பிரேரணையில், இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் இணைந்து செயற்படாது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக அல்லது அனைத்து கட்சிகளையும் இணைப்பதாகக் கூறிக்கொண்டு எந்தவொரு சிவில் சமூகத்தினரோ மதகுருமாரோ முன் வர வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாம் பாராளுமன்றத்தில் அல்லது வேறு செயற்பாடுகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து பயணிக்க மாட்டோம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.