இலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ (International Women of Courage)‘ விருதுப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 8 ஆம் திகதி மெய்நிகர் தொழில்நுட்பத்தினூடாக நடைபெறவுள்ள இந்த விருது வழங்கும் விழாவில் அமெரிக்காவின் முதல் பெண்மணி Dr. ஜில் பைடன் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து உரையாற்றவுள்ளார்.
உலகெங்கிலும் பெண்களின் அமைதி, நீதி, மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், வலுவூட்டல் போன்றவற்றுக்காக போராட்டத்தில் தனித்துவமாக அபாயத்தையும் பொருட்படுத்தாமல் தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்திய பெண்களை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகின்றது.
ரனிதா ஞானராஜா, அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிப்புகளை எதிர்நோக்கும் சமூகங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்குவதன் மூலம் பல ஆண்டுகளாக கைதிகளின் நீதிக்காக ரனிதா போராடிவருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தனிப்பட்ட முறையில் போரினால் பாதிக்கப்பட்ட இவர், பாதிக்கப்பட்டவர்களுடன் பணியாற்றிய விரிவான அனுபவத்தின் அடிப்படையில், அவர்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் பெற்றுக்கொடுப்பதில் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார், எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இதற்கமைய 15 ஆவது ஆண்டாக வழங்கப்படும் ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ விருதுக்கு சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவாகியுள்ளார்.
2007 முதல் இதுவரை 75 நாடுகளை சேர்ந்த 155 பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.