(FilePhoto)
இன்று மியன்மாரில் நடந்துகொண்டிருக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாளை எமது நாட்டிலும் நடந்துவிடக்கூடாது என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இன்று இலங்கையின் பயணம் ஆரோக்கியமானதல்ல என்பது தெளிவாக தெரிகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் நிகழ்கால செயற்பாடுகள், மாகாணசபை தேர்தலுக்கான நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது அரசியல் தலையீடுகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டது, இவ்வாறான நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுயாதீனம் என்ற பெயரில் மறைமுகமான அரசியல் அதிகாரமொன்று இயங்கிக்கொண்டுள்ளது, அதிகார மோகத்தில் செயற்படும் ஒரு சிலர் அரசியல் தலைவர்களின் நோக்கங்களுக்கு இடமளிக்க கூடாது. நீதிமன்ற சுயாதீனம் கூட இன்று பாரிய சவாலுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு நாட்டின் சுயாதீனத்தை கேள்விக்குட்படுத்தும் 20 ஆம் திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றிய சிலருக்குத்தான் இன்று மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவை தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலமாக குரல் எழுப்ப வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மியன்மார் இன்று மிக மோசமான ஜனநாயக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கான புரட்சியில் பலநூறு பேர் இப்போது வரையில் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு ஜனநாயக புரட்சி ஒன்று வெடித்துள்ளது.
இன்று மியன்மாரில் நடந்துகொண்டிருக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாளை எமது நாட்டிலும் நடந்துவிடக்கூடாது எனவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.