கொரோனாவால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு இறுதி சுற்று நிரூபம் வெளியிடப்படும் வரை கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள போதிலும் அதில் உள்ள துணை உத்தரவுகளின்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமையவே அடக்கம் செய்யப்பட வேண்டும்.
இதற்கமைய கொரோனா மரணங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய பூர்வாங்க வரைவைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நிபுணர் குழு இன்று கூடியபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
நிலத்தடி நீர்மட்டத்தைக் கருத்தில் கொண்டு அடக்கம் செய்வதற்கு பொருத்தமான நிலப்பகுதிகள் அடையாளம் காணப்பட வேண்டும், இதன் பின்னரே இறுதி சுற்று நிரூபம் வெளியிடப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசெலா குணவர்தன தெரிவித்துள்ளார்.