தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்ற விடயத்தில் தமிழர் தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கீகரித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ஒற்றுமையான முன்னெடுப்பு என்பது அரசியல் கூட்டோ தேர்தல் கூட்டோ அல்ல. தமிழர்களுக்கு எதிரான விடயங்களில் அனைத்து தரப்புகளும் ஒன்றுசேர வேண்டிய தேவை இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு தமிழ் மக்கள் மத்தியிலே இது தொடர்பான எதிர்பார்ப்புகளும் இருக்கிறது. எனவே அரசியல் தலைமைத்துவம் கொடுக்கவேண்டியது எங்களது பொறுப்பு. அந்த பொறுப்பை நிறைவேற்றுவதை அரசியலுக்காக செய்கிறோம் என்று சொன்னால் அதனை ஏற்க்கமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறித்து இன்று பேசினோம். இலங்கை தொடர்பான விடயம் சர்வதேச மேற்பார்வையின் கீழே தொடர்ச்சியாக இருக்கவேண்டும்.
அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான செயற்பாடுகளை இணை அணுசரணை நாடுகளுடன் சேர்ந்து எடுத்திருக்கிறோம்.
மேலும் இந்த அரசாங்கத்தின் போக்கு தமிழர்களுக்கு எதிராக இருக்கிறது என்பது தெரிந்த விடயம். தற்போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எமது மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றது.
இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்பட்ட பிணக்குகள் தொடர்பாகவும் வரவு செலவுத் திட்டங்களுக்கு எதிராக வாக்களித்த கட்சி உறுப்பினர்களுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவும் நாங்கள் பேசியிருக்கிறோம்.
கட்சி பலப்படுத்தப்படவேண்டிய தேவை இருக்கிறது அதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.