ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பாக பல நாடுகள் நடுநிலைமையைப் பேணும் என்ற ஒரு நிலைப்பாடு காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தமிழ்க் கட்சிகள், வடக்கு- கிழக்கில் இருக்கக்கூடிய மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக இணை அனுசரணை வழங்கும் நாடுகளிடம் பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்கள்.
அதை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே இலங்கை அரசு கட்டாய ஜனாஸா எரிப்பு என்ற விடயத்தை நீக்கியிருக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு முஸ்லிம் நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்ற எண்ணத்தில் இதனை செய்திருக்கிறார்கள்.
எனினும் இஸ்லாமிய நாடுகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றமாட்டார்கள் என்று நம்புகிறோம். அதேபோல சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமல் போனவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் எனவும் காலம் கடந்த ஞானம் வந்தது போல இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகிறது எனவும் சுமந்திரன் விமர்சித்துள்ளார்.
இதேவேளை தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக் கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது என்ற கருத்தை நாங்கள் எல்லாருமே ஏற்றுக்கொண்டிருக்கிறோம் எனவும் அதனை மதத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசியல் ஒற்றுமையை எவ்வாறு வேகமாகவும், தீவிரமாகவும் நகர்த்துவது என்பது பற்றி ஒவ்வொரு கட்சிகளும் தமது தீர்மானம் எடுக்கும் கூட்டங்களில் பேசி வெகுவிரைவில் ஒரு கட்டமைப்பாக முன்னேறுவது குறித்த நடவடிக்கையை எடுப்போம்.
அத்துடன் இது ஒரு தேர்தல் கட்டமைப்பே கிடையாது. இது இன்று தமிழர்களுக்கு ஒரு அத்தியாவசிய தேவை அதனை பொறுப்போடு நாம் அணுக வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக் கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் எனவும் சுமந்தின் தெரிவித்துள்ளார்.